சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு ரெயில்வே 2025-2026ம் நிதியாண்டில் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுதலில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
அதன்படி 2025-2626ம் நிதியாண்டில் மட்டும் சுமார் 76 கோடியே 76 லட்சம் பயணிகள் தெற்கு ரெயில்வே மூலம் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 4.9 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் பயணிகள் கட்டண வருவாயாக ரூ.8 ஆயிரத்து 269 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் வருவாயை விட 9.7 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல டிக்கெட் பரிசோதனையில் தெற்கு ரெயில்வே முன்எப்போதும் இல்லாத வகையில் ரூ.160 கோடியே 75 லட்சம் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30.93 சதவீதம் அதிகமாகும். ரெயில்வே வாரியம் ஓராண்டிற்கு நிர்ணயித்த இலக்கை 11 மாதங்களிலேயே எட்டிப் பிடித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் அசத்தியுள்ளனர்.
மேலும் 42.113 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு ரூ.3,841 கோடியே 11 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பார்சல் சேவை மூலம் ரூ.168 கோடியே 64 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விளம்பரம் மற்றும் இதர சேவைகள் மூலம் ரூ.305 கோடியே 47 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.