தமிழக செய்திகள்

சபாநாயகர் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகிறார் ஜேசிடி பிரபாகர்

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

சென்னை,

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. 17-வது சட்டமன்றத்தின் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார்.

இன்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவிக்க உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஜே.சி.டி.பிரபாகர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எழிலன் நாகநாதனை எதிர்த்து போட்டியிட்டு 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.