சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். அதன்பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதேபோல், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க. அரசுக்கு 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்தனர். இதில், மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.
இந்த நிலையில், திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளை காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அந்த நாளில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும் என்று விதி உள்ளது.
அதன்படி, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சூழலில் தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும், ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ராஜினாமா செய்த 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்..? என்பது குறித்தும், 4 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது..? என்பது குறித்தும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் அவர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டிருந்தநிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.