சென்னை,
4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் தொடங்கியது. துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக சட்டசபையில், கோவையில் மாணவர் அமுதன் கொலை வழக்கு, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் நடத்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தொடர்ந்து இன்று நடைபெற்ற விவாதத்தில் சட்டசபை உறுப்பினர்கள் பேசினர்.
இந்த விவாதத்தின்போது பேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வின் 100 நாட்கள் ஆட்சியில் போதை கலாசாரம் பெருகிவிடவில்லை என்றும், தி.மு.க. ஆட்சியின்போதுதான் தமிழ்நாட்டில் போதை கலாசாரம் பெரிய அளவில் பரவியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், சட்டசபையில் புகைப்பட ஆதாரம், காவல்துறை அறிக்கை உள்ளிட்டவற்றை காட்டி ஆதவ் அர்ஜுனா சில கருத்துகளை பேசினார்.
இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சொன்ன கருத்தை நான் ஏற்க முடியாது. அதை மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” என்றார்.
தொடர்ந்து, மேகமலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பிரச்சனை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் நிர்மல்குமார், எம்.ஜி.ஆர். பேசியதாக கூறி ஒரு கருத்தை சுட்டிக் காட்டினார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு, “அமைச்சர் நிர்மல்குமார் கூறிய வாசகம் மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது” என்றார்.
இதேபோல வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியபோது, அவரது பேச்சுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் ரஞ்சித்குமாரின் சர்ச்சையான கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் பேசும்போது அமைச்சர் ரஞ்சித்குமார் மீண்டும், மீண்டும் குறுக்கிட்டு பேசினார். அவரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்திய சபாநாயகர், வனத்துறை அமைச்சரின் மைக் இணைப்பை துண்டிக்கும்படி உத்தரவிட்டார்.