தமிழக செய்திகள்

அமைச்சர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வேண்டுகோள்

மானியக் கோரிக்கை விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

சென்னை,

மிலாடி நபி என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இதனை தொடர்ந்து சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

முன்னதாக அவை நடவடிக்கையின்போது அமைச்சர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. அறிவிப்புகளில் தான் அரசினுடைய உயிர்நாடி, திட்டங்களெல்லாம் இருக்கிறது; புதிதாக அறிவிப்புகளை வெளியிடுகிறோம் என்று சொல்லும்போது அதை முழுமையாக அமைச்சர்களால் வெளியிட முடியவில்லை என்பது என்னுடைய கவனத்திற்கு வந்தது.

நேற்று இரவு இதைப் பற்றி யோசித்தபோது ஏறத்தாழ 2 மணியளவில் எனக்கு ஒரு யோசனை வந்தது; அமைச்சர்கள் பேசுகிறபோது முன்னுரை ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என்று நான் கேட்கும்போதே அறிவிப்புகளை முழுமையாக படித்துவிடுங்கள்; அதை பொறுத்து நேரம் கருதி பதிலுரையைக் குறைத்து கொள்ளலாம் இனிமேல் இந்த நடைமுறையைதான் மானியக் கோரிக்கைகளின்போது அமைச்சர்கள் பின்பற்ற வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.