சென்னை,
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, அதிமுக மூன்றாமிடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைப்பதற்கான நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களிப்பது குறித்து ஈபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி, தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பில் இருந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கொடுத்தனர். இதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்ட நிலையில் 3 பேரும் தவெகவில் இணைந்தனர்.
இதனையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி சத்யபாமா, மரகதம் குமரவேல் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை 3 எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது தங்களது ராஜினாமா முடிவு குறித்த தெளிவான விளக்கங்களை அவர்கள் சபாநாயகரிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தவெகவில் இணைந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் இன்று மீண்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி ராஜினாமா குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். ஏற்கனவே மூவரும் விளக்க கடிதம் அளித்திருந்த நிலையில், அதனை தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்த நடவடிக்கையை சபாநாயகர் எடுத்துள்ளார்.