தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளில் நாளை சிறப்பு பயோமெட்ரிக் முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் தங்களது கைரேகை, கண்கருவிழி பதிவுகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நாளை சிறப்பு பயோமெட்ரிக் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்), குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கைரேகை மற்றும் கண்கருவிழி (Biometric) பதிவுகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நாளை (ஆகஸ்ட் 2) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

கைரேகை பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களில், இதுவரையிலும் கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யாத உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அருகாமையிலுள்ள ரேஷன் கடைகளில் பதிவு செய்யலாம்

வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கிப் பணியாற்றி வருபவர்கள், மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் தாங்கள் தற்போது வசிக்கும் ஊர் அல்லது மாவட்டத்தில் உள்ள அருகாமையிலுள்ள நியாயவிலை கடைகளுக்கே நேரில் சென்று தங்களது ரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெறவும், இந்தச் சிறப்பு வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவு செய்யவும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.