சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பட்டாசு விபத்துகளில் காயம் அடைவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் நோக்கில் இந்த சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனியாக 25 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு, அவசர சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள், சிறப்பு களிம்புகள், திரவங்கள் மற்றும் மாத்திரைகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தடையற்ற சிகிச்சைக்காக அதிநவீன மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.
தீபாவளி பண்டிகை முடியும் வரை இந்த சிறப்புப் பிரிவு 24 மணி நேரமும் முழு வீச்சில் செயல்படும். அவசர சிகிச்சைகளை மேற்கொள்ள ஏதுவாக, அனுபவம் வாய்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள், பொது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், ஏதேனும் விபத்து நேர்ந்தால் தாமதிக்காமல் உடனடியாக இந்த சிறப்புப் பிரிவை அணுகி பொதுமக்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.