சென்னை,
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த பிளாட்பார்ம் 10 மற்றும் 11 ஆகியவை மூடப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த பிளாட்பார்மில் தற்போது புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மின்சார ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பீக் நேரங்களில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இரு மார்க்கங்களிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ரயில் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் இந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும். காலை 6.40 மணி முதல் 9.40 மணி வரை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு 7 நிமிட இடைவெளியில் மாநகர பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 20 நடைகள் இயக்கப்படும். அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து இயக்கப்படும்.
இந்த பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமைச் செயலகம், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். நாளை மறுநாள் முதல் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.