கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 9.50 மணி முதல் மே 1-ந்தேதி 11.07 மணி வரை (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 30/04/2026 முதல் 02/05/2026 வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 30/04/2026 அன்று 548 பேருந்துகளும், 01/05/2026 அன்று 565 பேருந்துகளும் மற்றும் 02/05/2026 அன்று 35 பேருந்துகளும் சென்னை மாதவரத்திலிருந்து 30/04/2026 அன்று 186 பேருந்துகளும் 01/05/2026 அன்று 174 பேருந்துகளும் மற்றும் சென்னை அடையாரிலிருந்து 30/04/2026 அன்று 55 பேருந்துகளும் 01/05/2026 அன்று 50 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 01/05/2026 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.