தமிழக செய்திகள்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 19ம் தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்..!

குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் 19ம் தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரேசன் கடைகளில் சிறப்பு முகாம்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் தெரிவித்திருப்பதாவது;-

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48% (eKYC) பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைவிரல் ரேகை பதிவு

இந்த (eKYC) பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 19.09.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, இன்று வரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் 19.09.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT