சென்னை,
தமிழ்நாடு முழுவதும் வருகிற 10 மற்றும் 17-ம் தேதிகளில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு முழுவதும் 10.8.2026 மற்றும் 17.8.2026 ஆகிய நாட்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சார்பில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தற்பொழுது தேசிய குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு 10.8.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
10.8.2026 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில் 1 வயது முதல் 19 வயது வரையிலான 2.06 கோடி குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கும், 20 வயது முதல் 30 வயது வரையிலான 52.44 லட்சம் பெண்களுக்கும் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், இம்முகாம்களில் விடுபட்டவர்களுக்கு வருகின்ற 17.8.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கப்படவுள்ளது.
இம்முகாம்களில் 1 வயது முதல் 2 வயதிலான குழந்தைகளுக்கு 1/2 மாத்திரையும் (200மிகி), 2 வயது முதல் 19 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு ஒரு மாத்திரையும் (400மிகி) வழங்கப்படும். இந்த அல்பெண்டசோல் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது.
குடற்புழு தொற்று தடுப்பு நாள் முகாம்களில் வழங்கப்படும் அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ரத்தச் சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
தமிழ்நாட்டில் 10.8.2026 திங்கட்கிழமை அன்று 54,481 அங்கன்வாடி மையங்கள், 11,723 துணை சுகாதார நிலையங்கள், 56,483 பள்ளிகளில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்களில் 54,481 அங்கன்வாடி பணியாளர்களும், 59,700 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும், 6,543 மருத்துவர்களும், 12,456 கிராம சுகாதார செவிலியர்களும், 2,650 ஆஷா பணியாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் இச்சிறப்பு முகாமில் பணியில் ஈடுபட உள்ளனர்.
எனவே அனைத்து பெற்றோர்களும் 10.8.2026 மற்றும் 17.8.2026 ஆகிய நாட்களில் நடைபெறும் குடற்புழு தொற்று தடுப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
“குடற்புழு தொற்றை குறைத்து வளமான எதிர்காலத்திற்கு வித்திடுவோம்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.