சென்னை,
தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் சிறப்பு விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றின் பயனாக சுய உதவிக் குழுவினர் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகரப்பகுதிகளில் வசிக்கும் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 2026-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் தீபாவளி சிறப்பு விற்பனைக் கண்காட்சி இன்று முதல் 06.11.2026 வரை நடைபெறுகிறது.
இந்த சிறப்பு விற்பனைக் கண்காட்சியில், பட்டு பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், சுவையான திண்பண்டங்கள், இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், பனை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் தரமானதாகவும், சரியான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் இந்த இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருட்களும் கிடைக்கும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் தீபாவளி சிறப்பு விற்பனைக் கண்காட்சியினைப் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான உற்பத்திப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி தீபாவளிப் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடிட அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.