தமிழக செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்

மருத்துவ முகாமில் பொது மருத்துவம், தொற்று நோய்கள், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது.

சென்னை,

காசிமேடு மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் மீனவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் ஸ்ரீநாத் இன்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சிறப்பு மருத்துவ முகாம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் இன்று நடைபெற்ற மீனவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், தொற்று நோய்கள், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் காசிமேடு பகுதியில் உள்ள காசிமாநகர், காசிபுரம், நாகூரார் தோட்டம், சிங்காரவேலன் நகர், அண்ணாநகர், திடீர் நகர், பல்லவன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் விஜயகார்த்திகேயன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.