நெல்லை,
“கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்து முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் நெல்லை பாளையங்கோட்டை சட்டக்கல்லூரி அருகே உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம், பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆட்சியில் என்ன நடந்ததோ? அதைவிட தற்போது அதிகமாக குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
திருச்செந்தூரில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு திருச்செந்தூர் கோவில் வருமானத்தை மட்டுமே எதிர்பார்க்கிறது. பக்தர்களுக்கு வசதிகள் செய்து தரவில்லை. அங்கு பக்தர்கள் எளிதாக உள்ளே சென்று தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவதற்கு தேவையான வழிமுறைகளை கண்டறிந்து செய்ய வேண்டும். தங்கத்தை உருக்கியது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நெல்லையப்பர் கோவிலைச் சுற்றி பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை அகற்ற வேண்டும்.
மதசார்பற்ற அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட கூடாது, அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கு சரியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவித்தார். அதுபோல் நல்ல விஷயங்களை முதல்-அமைச்சர் விஜய் செய்தால் பாராட்டுவோம்.
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கோவிலுக்கு வரும் வருமானத்தை கோவிலுக்கு மட்டுமே செலவு செய்வோம் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறியதை செயல்படுத்தினால் வரவேற்போம். அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை மீட்க வேண்டும் என்ற வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வாரியம் இருப்பது போன்று இந்து கோவில்களுக்கு வாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.