நெல்லை,
நெல்லை சரக காவல் அலுவலக கருத்தரங்கு கூடத்தில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு திருநெல்வேலி டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, தலைமை தாங்கினார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், மிக துரிதமாகவும், சாதுரியமாகவும் புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை கூண்டில் அடைக்க "சிங்கப்பெண்" குழுவினர் மிக சிறப்பாக செயல்பட்டனர்.
இதற்காக, அந்த புலனாய்வை முன்னெடுத்த சிங்கப்பெண் குழுவின் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்ராணி மற்றும் தலைமை காவலர் பானுமதி ஆகியோரை, டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு நேரில் அழைத்து பாராட்டினார். அவர்களின் பணியை பாராட்டி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வு அங்கிருந்த பெண் போலீசார் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
டி.ஐ.ஜி. ஆலோசனைகள்
இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பேசியதாவது:-
மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி படைகள் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். பெண் போலீசார் களப்பணியில் எதிர்கொள்ளும் நடைமுறை சிரமங்கள் மற்றும் சவால்களை கேட்டறிந்து, அவற்றை சரிசெய்ய உடனடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
நவீன குற்றங்களை எப்படி கையாள்வது, பணித்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பெண் போலீசாருக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
நெல்லை சரக டி.ஐ.ஜி-யின் இந்த ஆய்வுக் கூட்டம் மற்றும் பாராட்டு நிகழ்வு, தென் மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.