தமிழக செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சிறப்பு சுருக்கமுறை திருத்த நடைமுறையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை,

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“01.01.2027-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாட்டில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் 23.10.2026 அன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கால் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய தேசிய காங்கிரஸ் & தேசிய மக்கள் கட்சி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில், சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் அட்டவணை மற்றும் நடைமுறை பற்றி விரிவாக விளக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் இணைந்து பணியாற்றுவதற்கு, ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையத்திற்கும் ஒரு வாக்குச்சாவடி நிலை முகவரை நியமிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டன. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2027-ன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அட்டவணை தொடர்பாக விளக்கக் காட்சி (Power Point) கூட்டத்தின்போது காண்பிக்கப்பட்டது.

ஜனவரி 1, 2027 நிலவரப்படி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தகுதியுள்ள குடிமக்களும், இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த நடைமுறையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முழுமையான, துல்லியமான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT