சென்னை,
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மின்சார வினியோக பணிகளை நள்ளிரவு வரை நேரடி ஆய்வு செய்தார். சென்னை மாநகரின் உச்சபட்ச மின்சார தேவை கடந்த ஆண்டு மே 14-ந்தேதி 4 ஆயிரத்து 663 மெகா வாட்டாக இருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு 5 ஆயிரம் மெகா வாட்டை கடந்து கடந்த 10-ந்தேதி இரவு 10.30 மணியளவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக 5 ஆயிரத்து 14 மெகாவாட் உச்சபட்ச மின்சார தேவை பதிவு செய்யப்பட்டது. இது தமிழ்நாடு மின்வாரியத்தின் முக்கியமான மைல்கல்லாகும்.
சென்னை பெருநகர விரிவாக்கப்பகுதிகளில் இரவு நேரங்களில் சுமார் 10 முதல் 12 இடங்களில் பகிர்மான நிலையிலான மின்தடை ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. இத்தகைய உள்ளூர் மின் தடைகளை உடனடியாக சரிசெய்ய தேவையான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவற்றில், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து தலா 4 பணியாளர்கள் கொண்ட சிறப்புக்குழு சென்னைக்கு வர வழைக்கப்பட்டு புதைவட கேபிள் பழுதுகளை கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கண்டறியப்பட்ட தொழில்நுட்ப சவால்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலும், எதிர்கால மின்தேவையை திறம்பட பூர்த்தி செய்யும் வகையிலும் காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவற்றை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம், மாநில மக்களுக்கு தடையற்ற மின் வினியோகத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அனைத்து தேவையான தொழில் நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.