தமிழக செய்திகள்

சார்லபள்ளி-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்

வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 2-ந் தேதி முதல் நவம்பர் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

சேலம்,

பண்டிகை காலங்களில் ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து சேலம் வழியாக செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சார்லபள்ளி-செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரெயில் (07191) வருகிற 2-ந் தேதி முதல் நவம்பர் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சார்லபள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார் பேட்டை வழியாக இரவு 12.35 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

இதேபோல், மறுமார்க்கத்தில் செங் கோட்டை-சார்லபள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (07292), அக்டோபர் 3-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 12.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT