சென்னை,
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, கேரள மாநிலம் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே தென்காசி, காரைக்குடி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேரள மாநிலம் எர்ணாகுளம் ஜங்ஷனில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்டு 27, செப்டம்பர் 3, 10 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06061) மறுநாள் காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் ஜங்ஷனுக்கு ஆகஸ்டு 28, செப்டம்பர் 4, 11 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06062) மறுநாள் காலை 11.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
15 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (ஜூலை 24-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.