சேலம்,
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06056) வருகிற 31-ந் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப் பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.07 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து 6.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (06055) வருகிற 1-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.17 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.