சென்னை,
பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் - சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜோத்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு அக்டோபர் 3-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 04815) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 3-வது நாள் இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து ஜோத்பூருக்கு அக்டோபர் 6-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை செவ்வாய்கிழமைகளில் மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (04816) 3-வது நாள் இரவு 8.30 மணிக்கு ஜோத்பூரை சென்றடைகிறது.
இரு மார்க்கத்திலும் 9 முறை வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் 19 பெட்டிகளை கொண்டதாக இருக்கும்.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.