திருப்பூர்,
பண்டிகை காலங்களில் ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக போத்தனூர்-பரவுனி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, போத்தனூர்-பரவுனி வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்:06021) அக்டோபர் 4-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் போத்தனூர் சந்திப்பில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக காலை 9 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் சேலத்தில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனி சென்றடையும்.
இதேபோல், மறு மார்க்கத்தில் சிறப்பு ரெயில் (வ.எண்:06022) அக்டோபர் 7-ந்தேதி முதல் நவம்பர் 4-ந்தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பரவுனியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு, திருப்பூர் வழியாக வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.