சேலம் ,
பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், திருவனந்தபுரம் வடக்கு-மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ள தாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு-சந்திரகாச்சி வாராந்திர சிறப்பு ரெயில் (06081) அக்டோபர் 2-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் 2.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக மறுநாள் மதியம் 1.45 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் சந்திரகாச்சி-திருவனந்தபுரம் வடக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06082) அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சந்திரகாச்சியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு. ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் இரவு 9.25 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் 9.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.