சேலம்,
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மைசூரில் இருந்து கண்ணூருக்கும் மற்றும் கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூர்-கண்ணூர் சிறப்பு ரெயில் (06227) நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடையும், இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும்,
அதேபோல கண்ணூர்-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06228) வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6.25 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் அதி காலை 3.17 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.20 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 8.35 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.