தமிழக செய்திகள்

திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்: ராபர்ட் புரூஸ் எம்.பி. கோரிக்கை

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

வைகாசி விசாகம் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் பிறந்த தினத்தில் நடத்தப்படும் முக்கிய திருவிழாவாகும். வைகாசி மாதம் திருச்செந்தூரில் 10 நாட்கள் வசந்தோற்சவ திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிற 29, 30-ந்தேதிகளில் திருச்செந்தூரில் முருகப்பெருமானை தரிசிக்க வருவார்கள். ஆனால் அவர்களின் பயணத்துக்கு போதிய ரெயில் வசதிகள் இல்லை. இதனால் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இத்திருவிழாவிற்கு தற்போது திருவனந்தபுரம் முதல் திருச்செந்தூருக்கு நேரடி ரெயில் வசதி எதுவும் கிடையாது. 56309/56310 திருவனந்தபுரம் வடக்கு-நாகர்கோவில் பயணிகள் ரெயில்களின் ரேக்குகள் வாரத்தின் மூன்று நாட்களுக்கு எந்தவித பராமரிப்பும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திருச்செந்தூர் வரை நீட்டித்தால் பக்தர்கள் பெருமளவில் பயன்பெறுவர்.

அத்தோடு வைகாசி விசாக திருவிழாவுக்கு கொல்லம்-திருச்செந்தூர் (வழி செங்கோட்டை, நெல்லை), மதுரை-திருச்செந்தூர் (வழி நெல்லை). மும்பை-திருச்செந்தூர் (வழி திருத்தணி, கும்பகோணம்), திருத்தணி-திருச்செந்தூர் (வழி கும்பகோணம்), கோவை-திருச்செந்தூர் (வழி பழனி) ரெயில்களை வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை வைகாசி விசாகத் திருவிழாவுக்காக சிறப்பு ரெயில்களாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.