ஈரோடு,
சபரிமலை சீசன் தொடங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு சபரிமலை பக்தர்களின் வசதிக்காக ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி மராட்டிய மாநிலம் நாந்தேட்- கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்- 07189) நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஈரோட்டுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 9.15 மணிக்கு வரும். கொல்லம்- சாரளப் பள்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண்- 07190) வருகிற 17-ந்தேதி இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.20 மணிக்கு ஈரோட்டுக்கு வரும்.
இதேபோல் சாரளப்பள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-07180) வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) வரை ஈரோடு வழியாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்படும். கொல்லம்- சாரளப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-07181) வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 27-ந்தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.