சென்னை,
சென்னை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாமை அண்ணாநகரில் மாநகராட்சி ஆணையாளர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த 12.11.2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று நடைபெற்றது.
இதில், அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, செனாய் நகர், புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் சமீரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த சிறப்பு முகாமானது, நாளை (22.11.2026) ஞாயிற்றுக்கிழமை அன்றும், 29.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்றும். காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.