சென்னை,
அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, செனாய் நகர், திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;-
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த 12.11.2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று நடைபெற்றது.
இதில், அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, செனாய் நகர், திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) சரவணன், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, அண்ணாநகர், 12ஆவது பிரதான சாலையில் உள்ள கிரேஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி, சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி, வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மத்திய வட்டார துணை ஆணையர் கௌஷிக், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த சிறப்பு முகாமானது, மேலும் 29.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்றும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.