சென்னை,
மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், வந்தே பாரத் ரெயில் வேகத்தில் பறந்து 2 மணி நேரத்திற்கு முன்பாகவே இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
தென்னக ரெயில்வேயின் அடையாளமாகத் திகழும் வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை - மதுரை இடையேயான பயண நேரத்தில் புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளது. வந்தே பாரத் ரெயிலின் வேகத்திற்கு இணையாக பயணித்து, வழக்கமான பயண நேரத்தை விட 2 மணி நேரம் முன்பாகவே மதுரையை சென்றடைந்துள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு இடைப்பட்ட 430 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக 7 மணி நேரம் 35 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், கடந்த 24-ம் தேதி அன்று நடைபெற்ற பயணத்தில், வெறும் 5 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை எட்டி இந்த வரலாற்றுச் சாதனையை அது நிகழ்த்தியுள்ளது.
அன்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து வழக்கமான நேரத்தை விட 10 நிமிடங்கள் தாமதமாகவே வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. மேலும், கோடம்பாக்கம் அருகே நடைபெற்ற வந்த பராமரிப்புப் பணிகள் காரணமாக மேலும் 20 நிமிடங்கள் வரை ரெயில் தாமதமானது. இருப்பினும், அதன் பின் தடையற்ற வழித்தடம் அமைத்துக் கொடுக்கப்பட்டதால், லோகோ பைலட்டுகள் ரெயிலை அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அசத்தினர்.
வழக்கமாக இரவு 9:25 மணிக்கு மதுரை சென்றடைய வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், 2 மணி நேரம் முன்னதாகவே, அதாவது இரவு 7:35 மணிக்கே மதுரை சந்திப்பை வந்தடைந்தது. எதிர்பாராத இந்த அதிவேகப் பயணத்தாலும், மிக முன்னதாகவே ஊர் வந்து சேர்ந்ததாலும் ரெயிலில் பயணித்த பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ரெயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மற்றும் லோகோ பைலட்டுகளின் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பால் சாத்தியமான இந்த அசாத்திய வேகம், சமூக ஊடகங்களிலும் ரெயில் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.