சென்னை,
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 40-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது;-
“விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது இல்லை. கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு இணையாக மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் அங்கீகாரம், பொருளாதார முன்னேற்றம், பணி பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்ந்து இருந்துகொண்டே வருகிறது.
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, விளையாட்டுத்துறைக்கு என்ன தேவை என்று கேட்டாலும் அதனை உடனடியாக செய்து கொடுக்குமாறு உத்தரவிடக்கூடிய முதல்-அமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் 1994-க்கு பிறகு விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை.
அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, நேரு ஸ்டேடியம், வேளச்சேரி நீர் விளையாட்டு வளாகம், டென்னிஸ் ஸ்டேடியம் உள்ளிட்டவற்றை கட்டினார். ஆனால் அதற்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த விதமான விளையாட்டு உள்கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை. ஆனால் டெல்லி, குஜராத், புனே போன்ற இடங்களில் எல்லாம் விளையாட்டு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஜெயிக்கக் கூட்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
நமது இளைஞர்கள் போதையின் பக்கம் செல்லவே கூடாது, அதற்கு என்ன செய்ய வேண்டுமே அதை செய்யுங்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் எங்களிடம் கூறினார். முதல்-அமைச்சரின் கனவு திட்டம் என்பது, ஒரு ஒலிம்பிக் நகரத்தை உருவாக்க வேண்டும்; அதில் உலகத் தரம் வாய்ந்த 46 விளையாட்டு போட்டி அரங்குகளை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. மேலும் தமிழகத்தில் 10 ஒலிம்பிக் அகாடமிகளை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.
ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை நாம் வெல்ல வேண்டும் என்றால் அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். நம்மிடம் அந்த உள்கட்டமைப்பு இல்லாததால், நமது வீரர்கள் ஒலிம்பிக் வரை சென்றாலும் பதக்கம் வெல்ல முடியவில்லை. மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு இங்கு மைதானம் கிடையாது. ஆனால் கர்நாடகாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, விளையாட்டு உள்கட்டமைப்புக்கான ஒரு பயணத்தை நாம் தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய்யிடம் நாங்கள் கூறியபோது, உடனடியாக அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தார். பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் தினமும் வகுப்புகள் இருக்கின்றன. ஆனால் நமது உடலை கவனித்துக் கொள்ளக்கூடிய உடற்கல்வி, விளையாட்டு வகுப்புகள் தினமும் இல்லை என்பதை முதல்-அமைச்சரிடம் எடுத்துக் கூடியபோது, உடனடியாக தினமும் விளையாட்டு வகுப்புகளை தொடங்குவதற்கு உத்தரவிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தினார்.
இந்த சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி முதல்-அமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். கல்லூரிகளில் விளையாட்டு வகுப்புகள் தனியாக இல்லை. எனவே, உடற்கல்வி, விளையாட்டு வகுப்புகளை கல்லூரிகளிலும் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க விளையாட்டுதான் மிகப்பெரிய மருந்து. மேலும், விளையாட்டுத் துறையில் வீரர்களும், வீராங்கனைகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், அதற்கான திட்டங்களை தொடங்க வேண்டும் என்றும், அதற்கான முதலீடுகளை எத்தனை ஆயிரம் கோடிகளாக இருந்தாலும் செலவு செய்யலாம் என்றும் எங்களுக்கு முழு சுதந்திரத்தை தமிழக முதல்-அமைச்சர் விஜய் விளையாட்டுத்துறைக்கு கொடுத்துள்ளார்.
அதனால்தான் வரலாற்றில் முதல் முறையாக 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டை விளையாட்டுத்துறைக்காக முதல்-அமைச்சர் விஜய் ஒதுக்கினார். மேலும், முதல் முறையாக திருநங்கைகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டியை உருவாக்க வேண்டும் என்பதை பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். விளையாட்டுத்துறைக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கும் வகையில் ஒரு பெரிய சூழல் அமைப்பை முதல்-அமைச்சர் விஜய் உருவாக்கியுள்ளார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.