சென்னை,
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் குணேஸ்வரன் (வயது 69). இவர் சென்னை தியாகராயநகரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவி நாகுலாம்பிகையுடன் (60) வசித்து வந்தார். அங்கு சிறிய அளவில் நகைக்கடை ஒன்றையும் வைத்துள்ளார். இவரது மகள் மற்றும் குடும்பத்தினர், இலங்கை யாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள். இலங்கை பாஸ்போர்ட்டில் தமிழகத்தில் தங்கியிருந்த இவர், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.
அதை பயன்படுத்தி சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுபோட்டுள்ளார். இது கண்டுபிடிக்கப்பட்டு, மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், இவர்கள் இருவர் மீதும் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென் றுள்ளனர். அப்போது இவர்கள் தமிழக வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.