திருவண்ணாமலை,
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலையில் ‘தென் திருப்பதி’ என்று போற்றப்படும் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கே கோயிலின் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
பூஜைகளுக்குப் பின், பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கோவிந்தா என்ற கோஷத்துடன் பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கிரிவலம் வரவுள்ளார். இந்த கிரிவலக் காட்சியைக் காண பெருமளவில் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.