தமிழக செய்திகள்

ஸ்ரீரங்கம் பூங்காவுக்கு 'கரும்புள்ளி புதர்சிறகன்' என்ற அரிய வகை வண்ணத்துப்பூச்சி வருகை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளது.

திருச்சி,

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு 'கரும்புள்ளி புதர்சிறகன்' என்ற அரியவகை வண்ணத்துப்பூச்சி வருகை தந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பூங்காவில் 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டன.

பின்னர், வண்ணத்துப்பூச்சிகளை கவரக்கூடிய உணவு தாவரங்கள், தேன் தாவரங்கள், ஓய்வு எடுக்கும் தாவரங்கள் என 460-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்க்கப்பட்டதன் காரணமாக 131 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டன. மேலும் 112 வகையான பறவை இனங்களும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரும்புள்ளி புதர்சிறகன்

இந்த நிலையில், இப்பூங்காவிற்கு 132-வது வரவாக 'கரும்புள்ளி புதர்சிறகன்' எனப்படும் அரிய வகை வண்ணத்துப்பூச்சி வருகை தந்தது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வண்ணத்துப்பூச்சி 40 முதல் 45 மி.மீ. வரை இறக்கை விரிவைக் கொண்ட நடுத்தர அளவிலானது. இதன் இறக்கைகளின் மேல்புறம் அடர் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்புறம் சற்று வெளிர் பழுப்பு நிறத்திலும் உள்ளது.

மேலும், இறக்கைகளின் ஓரங்களில் கண்களைப் போன்ற வட்ட வடிவிலான புள்ளிகள் வரிசையாக உள்ளன. இவை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் இயற்கையான தோற்ற அமைப்புகளில் ஒன்றாகும். இவை பொதுவாக புல் வெளிப்பகுதிகளில் காணப்படுகின்றன. பறக்கும்போது இறக்கைகளை நீண்ட நேரம் மூடியபடியும், சீரற்ற முறையிலும் பறக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. பருவநிலைக்கு ஏற்ப தோற்றம் மாறுபடுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

வாழிடங்கள்

மழைக்காலத்தில் இறக்கைகள் அதிக அடர் நிறத்திலும், கண் போன்ற புள்ளிகள் தெளிவாகவும் காணப்படும். வறண்ட காலத்தில் இதன் நிறம் மற்றும் புள்ளிகளின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். இதன் பெண் வகைகள், ஆண் வகைகளை விட சற்று பெரிதாகவும், வெளிர் நிறத்திலும் காணப்படும். ஈரப்பதம் நிறைந்த அடர்ந்த காடுகள் மற்றும் புல்வெளிப் பகுதிகள் இவற்றின் வாழிடங்களாகும். குறிப்பாக மலை அடிவாரங்களில் உள்ள பசுமை மாறாக்காடுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. இந்த தகவலை வனத்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT