திமுக பிரமுகர் ராம்குமார்  
தமிழக செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி வழக்கு: திமுக பிரமுகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில், திமுக பிரமுகர் ராம்குமார் மற்றும் சார்பதிவாளர் வனிதா ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர் ராம்குமாரை கைது செய்ய போலீசார் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நில மோசடி வழக்கு

திருச்சி ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை, போலி ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் வனிதா உள்ளிட்டோர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பு

இவ்வழக்கில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க, ராம்குமார் மற்றும் சார்பதிவாளர் வனிதா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, கோவில் நில மோசடியில் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.

போலீசார் தீவிரம்

நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகர் ராம்குமார் மற்றும் சார்பதிவாளர் வனிதாவை உடனடியாகக் கைது செய்ய திருச்சி குற்றப்பிரிவு போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT