சென்னை,
ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகார் தொடர்பாக, சட்டமன்றத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய பேச்சு ஏற்புடையது அல்ல என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாதர் சங்கம் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகள் மீது தவெக சார்ந்த பெண் முன்வைத்துள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய புகார்களில் அரசு எந்தவித அரசியல் சார்பும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் நியாயத்தை முன்னிறுத்தி செயல்பட வேண்டியது அவசியமாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதாகவும், அந்த விசாரணையின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பாதிக்கப்பட்ட பெண் முன்வைத்துள்ள விளக்கம் மிகுந்த அதிர்ச்சியையும், விசாரணையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது.
பாதிக்கப்பட்ட பெண், தனது புகாரில் சட்டமன்ற உறுப்பினரின் பெயரை காவல் நிலையத்தில் சொன்னபோது “அவரது பெயரை சேர்க்கக்கூடாது” என்று மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும், இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்றதாக கூறப்படும் விசாரணைக்கு தன்னை அழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை எங்கு நடைபெற்றது, யார் விசாரணை அதிகாரிகள் என்பதுகூட தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடமே விசாரணை நடத்தப்படவில்லை என்றால், எந்த அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றது? அவரது புகாரின் முழுமையான அம்சங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டன? அவரது வாக்குமூலம் இல்லாமல் அவரது புகாரின் உண்மை தன்மையை எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள்?
ஒரு பெண் தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கும்போது, அதில் தலையீடு செய்வது அதன் அடிப்படையே கேள்விக்குள்ளாக்குதாகும். விசாரணையின் சில அம்சங்களை மட்டும் சுட்டிக்காட்டி வழக்கை முடித்துவிட முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனுக்கு தொடர்பில்லை என்ற முடிவை எட்டுவதற்கு முன் நடைபெற்ற விசாரணை முழுமையானதா, நியாயமானதா, வெளிப்படையானதா என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவர் அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதற்காக விசாரணையிலிருந்தும் விடுவிப்பது ஏற்க முடியாது.
எனவே, ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் இதுவரை நடைபெற்ற விசாரணையின் முழுமையான நடைமுறையை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளையும் அவர் எழுப்பியுள்ள கேள்விகளையும் முறையாகப் பரிசீலித்து, தேவையானால் மறுவிசாரணை மேற்கொள்ள வேண்டும்.
எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளில் சமரசத்திற்கோ, அரசியல் செல்வாக்கிற்கோ, அதிகார அழுத்தத்திற்கோ இடமிருக்கக் கூடாது.
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் பக்கம் நிற்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் அரசு உறுதியாக நிற்க வேண்டும். அவர் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் உரிய, வெளிப்படையான பதிலை அளித்து. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.