சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை அழைத்துச் சென்ற தவெக நிர்வாகிகள் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த ஸ்ரீவைகுண்டம் பகுதி நிர்வாகிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் பெயரைச் சொல்லி வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை காரில் கடத்திச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மிகக் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இளம்பெண்ணை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் என்பவரும் போலீசில் புகார் அளிக்கக் கூடாது எனவும் மிரட்டியுள்ளதாக அப்பெண் ஊடகங்கள் வாயிலாக குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சி பிரமுகர்கள் என்பதால் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமான விசாரணை நடத்திட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண் முன்வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பும், அரசு வேலையும், நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அதிகாரம், பதவி, பணம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.