சென்னை,
விடுதலைப் போராட்ட வீரரான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத்குமார் ஆகியோர் இன்று (16.9.2026) சென்னை, கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள ராமசாமி படையாட்சியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்பிரகாசம் (சைதாப்பேட்டை), தியாகராஜன் (செங்கல்பட்டு), சரவணமூர்த்தி (சோழிங்கநல்லூர்), காமாட்சி (பல்லாவரம்), விஜயராஜ் (திருப்போரூர்), ஹரிஷ் (ஆலந்தூர்), செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண்தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்கள் தென்னாற்காடு மாவட்டம், கடலூரில் சிவசிதம்பரம் படையாட்சி - ரெத்தினம்மாள் தம்பதியருக்கு 16.9.1918 அன்று மகனாகப் பிறந்தார். இளமையில் படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவராக விளங்கினார். அந்தக்கால கல்வியான இன்டர்மீடியட் வரை கல்வி பயின்றார்.
ராமசாமி படையாட்சியார் 1950-ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். இளம் வயதிலேயே சமுதாயப் பணியில் நாட்டம் கொண்டதன் விளைவாக, தனது 24-வது வயதில் கடலூர் நகராட்சியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் நகராட்சித் தலைவராகவும் தேர்வு பெற்றார். மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். தமது 60 ஆண்டுகள் பொதுவாழ்வில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை மேலவை உறுப்பினர், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அமைச்சர் என்றளவிலும் மக்கள் பணியாற்றினார்.
ராமசாமி படையாட்சியார் வேண்டுகோளின் பேரில் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு முதலாம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு என்ற அமைப்பை A.N.சட்டநாதன் என்பவரை தலைவராக கொண்டு அமைத்தார். அவர் 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் 3 அன்று மறைந்தார். இவர் மக்களுக்கு ஆற்றிய சேவையை போற்றுகின்ற வகையில், 1993-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, தென்னாற்காடு மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை ராமசாமி படையாட்சியார் மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டது. ராமசாமி படையாட்சியாரின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 16 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.