தமிழக செய்திகள்

“ஒவ்வொரு திட்டங்களின் மூலம் பயன்பெறும் அனைவரின் உள்ளத்திலும் இருக்கிறார் ஸ்டாலின்” - தி.மு.க. எம்.எல்.ஏ.ரகுபதி

அண்ணன் சீர், தாய்மாமன் சீர் திட்டங்களை அரசால் நிறைவேற்ற முடியாது என்று திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டினார்.

சென்னை,

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன்தினம் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

தி.மு.க. எம்.எல்.ஏ ரகுபதி

இந்நிலையில் சட்டசபையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ ரகுபதி, "நிதியமைச்சர் கையில் ஜெபமாலையோடு வந்து பட்ஜெட்டை அறிவித்தார். வேளாண் அமைச்சர் திருப்பதி லட்டோடு வந்து வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒன்றே குலம் ஒருவன் தேவன் என்கிற கொள்கையை கொண்டது திமுக. தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகள் ஏன் நிரப்பப்படவில்லை? தகவல் ஆணையத்திடம் தகவல் கேட்டால் பதிலளிக்க ஆணையர்கள் இல்லை என்கிறார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மையாக இருக்கிறோம் எனக் கூறும் அரசு தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகளை நிரப்பாமல் இருப்பது ஏன்?

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டு அரசின் கொள்கைகளை வடிவமைப்பதிலும், ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதாக ஒரு ஆங்கில செய்திநாளிதழில் வந்துள்ளது அது உண்மையா..?” என கேள்வி எழுப்பினார்.

பிரவீன் சக்கரவர்த்தி

அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஸ்வநாதன், “பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அவையில் அங்கத்தினர் அல்லாதவரை பற்றி பேசுவது என்பது வழக்கத்திற்கு மீறிய செயலாகும். நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் தமிழக அரசின் சார்பாகவோ, அங்கீகாரம் பெற்ற குழுக்களின் சார்பாகவோ எந்த அமைப்பிலும் அங்கத்தினராக இல்லாதவர்.

ஊடகங்கள் சமீப காலங்களில் ஒரு செய்தியை பல்வேறு செய்தியாக எழுதிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையில் வரும் செய்தியை வைத்துக் கொண்டு தி.மு.க. முன்னாள் அமைச்சர் சம்பந்தமில்லாத அவையில் இல்லாத நபரை பற்றி கருத்துக்களை சொல்வதை ஏற்புடையதல்ல” என்று கூறினார்.

நிதியமைச்சர் மரிய வில்சன்

தொடர்ந்து பேசிய ரகுபதி, " நிதிநிலை அறிக்கையில் கசிவு...கசிவு என புது வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள். அது என்ன கசிவு? என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், " ஒவ்வொரு துறையிலும் எப்படி நிதிக் கசிவு நடந்திருக்கிறது என்பதை தணிக்கை செய்து வருகிறோம். மூன்று துறைகளுக்கான தணிக்கை முடிந்துவிட்டது. நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்தே முதல்-அமைச்சர் எங்களை அழைத்து தணிக்கை பற்றி கேட்டிருக்கிறார். கடந்த முறை பார்ட்டி பண்ட் என்றவுடன் அவையை விட்டு வெளியேறினீர்கள். இனி அப்படி இருக்காது. எல்லாவற்றையும் தணிக்கை செய்து கோப்புகளோடு அவையில் நிரூபிப்போம்" என்று கூறினார்.

அமைச்சர் ஆனந்த்

தொடர்ந்து பேசிய ரகுபதி, “இப்போது பில் வாங்க ஒவ்வொரு அலுவலகத்திற்கும் போய் பாருங்கள். நீர்வளத்துறையில் 3 சதவீதம் கொடுத்தால்தான் பில் என்று சொல்கிறார்கள். பொதுப்பணித்துறையில் 5 சதவீதம் கொடுத்தால்தான் பில் என்று சொல்கிறார்கள்" என்றார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆனந்த், " ஆதாரத்துடன் பேச வேண்டும். அது பழைய காலம்... இந்தக் காலத்தில் ஒத்த ரூபாய் நாங்கள் வாங்கினால், நாளைக்கே எங்களை இங்கே உட்கார வைக்க மாட்டார் எங்களுடைய முதல்-அமைச்சர். வாயால் பேசுவது எல்லாம் சரிதான். நீங்கள் நிரூபியுங்கள் ...எதுமே இல்லாமல் நீங்கள் பாட்டுக்கு பேசினால் எப்படி?" என்று கேள்வி எழுப்பினார்.

மீண்டும் விடியல்

தொடர்ந்து பேசிய ரகுபதி, “மக்கள் பணத்தை தொட மாட்டோம், இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம் எனச் சொல்கிறீர்கள். ஆனால் இதுக்கு முன்னாடி தொட்டவங்க எல்லாருமே அங்கே வந்துகிட்டேதான் இருக்காங்க. அண்ணன் சீர், தாய்மாமன் சீர் திட்டங்களை அரசால் நிறைவேற்ற முடியாது.

எங்கே இருக்கிறார் எங்கள் தலைவர் என்று கேட்டவர்களுக்கு சொல்கிறோம். மகளிர் உரிமை தொகை வாங்குகிற ஒவ்வொருவரது உள்ளத்திலும் இருக்கிறார். விடியலை நீங்கள் எடுத்துவிட்டீர்கள்... பரவாயில்லை. எங்களால் தமிழ்நாட்டிற்கு மீண்டும் விடியல் கிடைக்கும். அந்த விடியல் பயணத்தில் அவர் இருக்கிறார்” என்று கூறினார்.

அப்போது பேசிய நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், “மகளிர் உரிமை தொகை பற்றி கேட்டால் உங்கள் தலைவர் பெயர்தான் வரும் என்று சொல்கிறீர்கள். ஒன்றை மறந்துவிட்டீர்கள்... தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் மீதும் ஒரு லட்சத்து 28 ஆயிரம் கடன் விட்டுவிட்டு சென்றதும் நீங்கள்தான். அங்குதான் அவரை தேட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை யாரிடம் விட்டுவிட்டு சென்றீர்கள்..?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.