தமிழக செய்திகள்

ஸ்டாலினுக்கு மகனை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள்: அமித்ஷா பிரசாரம்

தமிழகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் சிவகிரி அரசு மருத்துவமனை முதல் தீரன் சின்னமலை சிலை வரை சாலை வலம் செல்கிறார். அப்போது, மொடக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளரான கிருத்திகாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் மொடக்குறிச்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, இந்தியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், தமிழகம் இழந்த பெருமைகள் மீட்டெடுக்கப்படும் என்று கூறினார்.

அப்போது, தி.மு.க. ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் முடிவுக்கு வரும் என்றார். தமிழகத்தில் கருணாநிதி, அவருடைய மகன் ஸ்டாலின், அதன்பின்னர் அவருடைய மகன் என குடும்ப அரசியல் தொடர்கிறது. ஸ்டாலின், அவருடைய மகன் ஆட்சிக்கு வரவேண்டும் என பணியாற்றி கொண்டிருக்கிறார். தனது மகனை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள்.

பெண்களுக்கு உரிமையை கொடுக்க கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்ற விடவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அந்த கூட்டணி முறியடித்து உள்ளது என்று பேசியுள்ளார்.

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படுவதுடன், வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவித்தது.

இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் 4 முனைப்போட்டி காணப்படுகிறது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோர் ஏற்கனவே வாக்கு சேகரித்து சென்றுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள சூழலில், மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு வருகை தந்து தங்களுடைய கூட்டணிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.