தமிழக செய்திகள்

இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கினார்

இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்த மாவட்ட, மாநில கலைப்போட்டிகள் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இளம் கலைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக் கொணரவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் மாவட்ட, மாநில கலைப்போட்டிகள் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. குரலிசை, பரதநாட்டியம், கருவியிசை, ஓவியம் மற்றும் கிராமியக்கலை என 5 பிரிவுகளில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்கள் பங்கு பெறும் வகையில் நடத்தப்படுகிறது.

சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் 08.09.2026 அன்று இசைக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டன. இப்போட்டியில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா 09.09.2026 அன்று சென்னை அருங்காட்சியகம் கலையரங்கில் நடைபெற்றது பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகள் வழங்கி விழா பேருரையாற்றினார்.

உருபாணர் குழுவின் தொல்கருவியிசை, அனுஷம் குழுவினரின் புவி காப்போம் நாட்டிய நிகழ்ச்சி, கிராமியக்கலைஞர்களின் தென்னிந்திய கிராமியக்கலைக்கூடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவின் தொடக்கமாக கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், வரவேற்புரையாற்றினார். அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் தே.பாஸ்கர பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் ஜெ. கார்குழலி நன்றியுரை நல்கினார். இவ்விழாவில், டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பூமாலினி, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி முதல்வர் கும்பகோணம் ஆ.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குரலிசை போட்டியில் பிரீத்தி சேதுராமன் (சென்னை), ச.வினோதா (காஞ்சிபுரம்), சி.மகன்யாஸ்ரீ (கிருஷ்ணகிரி), கருவியிசை போட்டியில் தவில் பி.வெங்கடேசன் (நாமக்கல்), வயலின் சா.முகுந்தன் (மயிலாடுதுறை), நாதஸ்வரம் ம.முருகன்(சென்னை), பரதநாட்டியப்போட்டியில் மு.இதிகாசினி (திருச்சிராப்பள்ளி), ம.சுகி பிரார்த்தனா (திருவள்ளூர்), ரா.மகேஸ்வரன் (சிவகங்கை), ஓவியப்போட்டியில் மா.ஸ்ரீநிலவன் (தஞ்சாவூர்), மா.கிஷோர் (ராணிபேட்டை), பொ.சுகுமார் (காஞ்சிபுரம்), கிராமியக் கலைப்போட்டியில் கு.பார்த்தீபன் (தருமபுரி), பி.பிரசன்னா (திருவள்ளூர்), க.அழகேஸ்வரன் (விருதுநகர்) ஆகியோர் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் பெற்றனர். முதல் பரிசு ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 என 15 இளம் கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT