சென்னை,
நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, தேவையில்லாமல் பாஜகவை சீண்டி நேரத்தை வீணடிப்பதை விட, தனது துறை வேலையை ஒழுங்காக கவனிக்க வேண்டும்! முதல்-அமைச்சர் விஜய் அதனை உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உட்பட தலைநகர் சென்னையின் முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக பொட்டல் காடு போல காட்சியளிப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஆளும் அரசின் நிர்வாகக் குளறுபடிகளை கோடிட்டு காட்டுகிறது.
சராசரி மற்றும் அதிகன வாகனங்கள் அதிகம் புழங்கும் மாநில நெடுஞ்சாலைகள் இப்படி பள்ளம் பள்ளமாக பிளந்து கிடப்பது, பல்வேறு விபத்துகளுக்கும் உயிர்பலிகளுக்கும் வழிவகுக்கும் என்பதை உணராமல், பொதுமக்களின் உயிருடன் விளையாடும் தவெக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்!
ஆட்சிக்கு வந்து அரை ஆண்டு முடிவடையும் தருவாயில் கூட, மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, ஆளத் தகுதியற்ற அரசு என்று தானே அர்த்தம்? தவெக அரசின் கடந்த பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத் துறைக்கென ஒதுக்கப்பட்ட 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி எங்கே போனது, என்ன ஆனது? வெள்ளை பேப்பரில் நிதியை மட்டும் ஒதுக்கி விட்டால் வேலை நடந்துவிடுமா?
எனவே, நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, தேவையில்லாமல் பாஜகவை சீண்டி நேரத்தை வீணடிப்பதை விட, தனது துறை வேலையை ஒழுங்காக கவனிக்க வேண்டும்! முதல்-அமைச்சர் விஜய் அதனை உறுதி செய்ய வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.