தமிழக செய்திகள்

தஞ்சை விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல் - எஸ்டிபிஐ கண்டனம்

தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்துக் கடன்களையும் முழுமையாக ரத்து செய்திட வேண்டும்

சென்னை,

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சையில் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகவும், பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறை மேற்கொண்ட அத்துமீறல்களும், கைது நடவடிக்கைகளும் கடும் கண்டனத்திற்குரியவை.

பயிர்க்கடன் தள்ளுபடி

தேர்தல் களத்தில், "விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும்" என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் வகையில் அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளைத் தரம் பிரித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்திருப்பது ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் ஏமாற்றும் செயலாகும். 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு விகிதாச்சார முறை என்றும் அரசு அறிவித்திருப்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்துக் கடன்களையும் முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அடக்குமுறை நடவடிக்கை

ஜனநாயக ரீதியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், காவல்துறையைக் கொண்டு அவர்களின் குரலை ஒடுக்க நினைப்பது ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல. எனவே, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்றும் வகையில், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் உடனடியாக, முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.