அமைச்சர் வ.காந்திராஜ் 
தமிழக செய்திகள்

கூட்டுறவு சங்க சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் வ.காந்திராஜ் நேரில் ஆய்வு

கூட்டுறவு துறையின் அனைத்து சேவைகளும் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் சென்றடையும் வகையில் பணியாற்றிட அனைத்து அலுவலர்களுக்கும் ஆய்வின் முடிவில் கூட்டுறவு துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

சென்னை,

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் பல்வேறு சேவைகள் பிரிவுகளில் 16.10.2026 அன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு செய்தார். இது தொடர்ப்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

ஆய்வு

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் தேனாம்பேட்டை வளாகத்தில் செயல்பட்டு வரும் காய்கறி கிடங்கு, பண்ணை பசுமை காய்கறி கடை, கூட்டுறவு மருந்தகம், காமதேனு திருமண மண்டபம், சுயசேவை பிரிவு மற்றும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவற்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார்.

அம்மா உணவகங்களுக்கான காய்கறி விநியோகம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களை சேர்ந்த 342 அம்மா உணவகங்களுக்கு நாள்தோறும் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்த அமைச்சர், காய்கறிகளின் தரம் மற்றும் எடை சரியாக இருப்பதை உறுதி செய்யவும், விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்யவும் அறிவுறுத்தினார்.

பண்ணை பசுமை காய்கறி கடைகள்

மேலும், பண்ணை பசுமை காய்கறி கடைகளில் உள்ள காய்கறிகளின் தரம், விற்பனை விலை மற்றும் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து, காய்கறிகளை முறையாக காட்சிப்படுத்தி விற்பனையை அதிகரிக்கவும், விரைவாக விற்பனையாகும் காய்கறிகளை தேவைக்கேற்ப கொள்முதல் செய்யவும் அறிவுறுத்தினார்.

கூட்டுறவு மருந்தகம்

அதன் பின்னர், கூட்டுறவு மருந்தகத்திற்கு வாடிக்கையாளர் வருகை மற்றும் அதிக விற்பனையாகும் மருந்துகளைக் கண்டறிந்து, தினசரி விற்பனையை அதிகரித்து மருந்தகம் இலாபகரமாகச் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

காமதேனு திருமண மண்டபம்

காமதேனு திருமண மண்டபத்தின் செயல்பாடு மற்றும் வரவு-செலவு விவரங்களைக் கேட்டறிந்து, மேடை, வண்ணப்பூச்சு, மின்விளக்குகள் மற்றும் குளிரூட்டும் வசதிகளைப் புதுப்பித்து, அடித்தள கிடங்கை புனரமைத்து வாடகைக்கு விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

சுயசேவை பிரிவு

இதனை தொடர்ந்து, பல்பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், தரமான முத்திரை பொருட்களை அதிக அளவில் விற்பனைக்கு வைக்கவும், பொருட்களின் விலைகளை முறையாக குறிப்பிடவும், தர பரிசோதனைக்காக மாதிரிகளை பராமரிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், விளம்பர நடவடிக்கைகள் மூலம் வாடிக்கையாளர் வருகையையும் விற்பனையையும் அதிகரிக்க அறிவுறுத்தினார்.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம்

பின்னர், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், வகுப்பறைகளில் குளிரூட்டி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.

நியாயவிலை கடையில் ஆய்வு

இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் ஆர்வார்பேட்டை-3 நியாயவிலை கடையில் அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து அமைச்சர் ஆய்வு செய்து. பொதுமக்களுக்கு எடைக் குறைவின்றி பொருட்களை வழங்கவும், கோதுமை மற்றும் கட்டுப்பாடற்ற பொருட்களைப் பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கவும், கட்டாயப்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தினார். மேலும், பாமாயில் விநியோகம் தடையின்றி நடைபெறுவதையும், கடை தொடர்ந்து தூய்மையாகப் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

அதன் பின்னர், கூட்டுறவுத் துறையின் அனைத்து சேவைகளும் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் சென்றடையும் வகையில் பணியாற்றிட அனைத்து அலுவலர்களுக்கும் ஆய்வின் முடிவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT