தமிழக செய்திகள்

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஷாஜகான்

முதல்-அமைச்சர் விஜய்யுடன் ஆலோசித்து, புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

கும்பகோணம்,

தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஷாஜகான் பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக கும்பகோணத்துக்கு வந்தார். அவரை அனைத்து அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சிறுபான்மையினர், தமிழக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. நாளை (திங்கட்கிழமை) மாலை முக்கிய கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கைகள் எடுக்க போகிறோம்.

வக்பு வாரியத்தின் சொத்துக்கள் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதை செம்மைப்படுத்த கூடிய வகையில் புதிய கணக்கெடுப்பு பணிகளும், புதிய சர்வே பணிகளும், ஏற்கனவே இருந்த அரசுகளால் பல்வேறு குறிப்புகள் தரப்பட்டுள்ளது. அந்த குறிப்புகளை பின்பற்றி முதல்-அமைச்சர் விஜய்யுடன் ஆலோசித்து, புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

தஞ்சை மாவட்டம் குடிகாடு, அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் பகுதியை இணைக்கக் கூடிய உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்திலே சொல்லப்பட்டு விரைவில் நிறைவேற்றி தரப்படும். தஞ்சை மாவட்டம் பரப்பளவில் மிகப்பெரியதாகவும், அதிக மக்கள் தொகையுடனும், 8 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. எனவே. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுடன் மீண்டும் ஒருமுறை நேரில் அமர்ந்து பேசி, அவர்களுக்கு சாதகமான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.