தமிழக செய்திகள்

51-வது நாளாக ஸ்டெர்லைட் ஆலைபோராட்டம் மேலும் ஒரு கிராமமக்கள் ஆதரவாக போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் மக்களின் தொடர் போராட்டம் இன்று 51-வது நாளாக நீடிக்கிறது. தூத்துக்குடி அருகே உள்ள மேலும் ஒரு கிராமம் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியுள்ளது. #SterliteProtest

தூத்துக்குடி

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் பணி தொடங்கியது.

இதற்கு தூத்துக்குடி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுவதாக புகார் கூறி ஆலை விரிவாக்கத்தை தடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்குழு சார்பாக கடந்த மாதம் தூத்துக்குடியில் பிரம்மாண்டமான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே அ.குமரெட்டியாபுரம் மக்களின் தொடர் போராட்டம் இன்று 51-வது நாளாக நீடிக்கிறது. இன்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் அங்குள்ள வேப்பமரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளி குழந்தைகள் ஆவேசமாக கண்டன கோஷம் எழுப்பி போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த பண்டாரம்பட்டி கிராம மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்பு கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் தங்களது கிராமத்தில் உள்ள மைதானத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.

இதனிடையே தூத்துக்குடி அருகே உள்ள மேலும் ஒரு கிராமம் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியுள்ளது. தூத்துக்குடியை அடுத்த வடக்கு சங்கரப்பேரி கிராம மக்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு திரண்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கண்டன கோஷம் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மடத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள். இதனால் தூத்துக்குடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தொடர் போராட்டங்களால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.