தமிழக செய்திகள்

ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? - திமுக கடும் தாக்கு

50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்கவில்லை என திமுக சாடியுள்ளது.

சென்னை,

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2-வது அலகுக்கான அடிக்கல்லில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006-ம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. கலைஞர் முதல்-அமைச்சராக இருந்போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.

2021-ம் ஆண்டு அவரே முதல்-அமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்-அமைச்சர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு.

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்-அமைச்சர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.