விருதுநகர்,
காரியாபட்டி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சூரனூரில் தனியார் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க 41 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, காரியாபட்டி துணை தாசில்தார் ஜெயராஜ் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளவீடு செய்ய சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது, கோவிலாங்குளம், உடுப்புகுளம், ஆவரம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். சோலார் திட்டம் அமைக்க உள்ள பகுதி தங்களின் விவசாய நிலம் என்றும், கண்மாய் நீர்வரத்து பாதையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது என்றும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சோலார் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கண்மாய்க்கு நீர்வரத்து தடைபடும் என்றும், விவசாய நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறி நிலத்தை அளக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நில அளவை செய்ய வந்த அதிகாரிகள் மீது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கல்வீச்சில் ஈடுபட்ட கிராம மக்களை தடுத்து நிறுத்தி, அதிகாரிகளை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சூரனூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.