நாகர்கோவில்,
பெண்களை கேலி செய்ததை கண்டித்த விவகாரத்தில் கல்லை வீசி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரை மிரட்டிய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் 2 பிரிவாக சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிக்கப்பட்டு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த வாரம் நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் 16 வயது சிறுவன். பெண்களை கேலி செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். பிறகு அந்த சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது அந்த சிறுவனுக்கு மனதளவில் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட சிறுவன் உள்பட 3 பேர் கோட்டார் இடலாக்குடி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். நண்பர்களும் 17 வயது நிரம்பிய இளம் சிறார்கள் ஆவர். அந்த சமயத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனம் அந்த வழியாக சென்றது. இதை பார்த்ததும் தனது நண்பர்களிடம், தன்னை ஏற்கனவே போலீசார் திட்டியதை கூறி உள்ளார்.
இதையடுத்து 3 பேரும் சேர்ந்து சிங்கப்பெண் வாகனத்தில் இருந்த போலீசாரை ஆபாசமாக பேசி திட்டினர். இதை கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் விஜிலா ராணி வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினார். உடனே அந்த 3 சிறார்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். அதன்பிறகு சப்-இன்ஸ்பெக்டர் வாகனத்தில் ஏறி புறப்பட தயாரானார்.
இதில் மூன்று பேரில் ஒரு சிறுவன் திடீரென திரும்பி, கீழே கிடந்த கல்லை எடுத்து சிங்கப்பெண் போலீஸ் வாகனத்தின் மீது வீசினார். அதிர்ஷ்டவசமாக கல் வாகனத்தின் மீது பட வில்லை. அத்துடன் நின்று விடாமல் 3 பேரும், இந்த பகுதிக்கு சிங்கப்பெண் போலீசார் வரக் கூடாது என கற்களை காட்டி மிரட்டியுள்ளனர்.
உடனே போலீசார் மீண்டும் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றனர். அதற்குள் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், கோட்டார் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போலீசாரை அவதூறாக பேசி கற்களை காட்டி மிரட்டி அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிறுவர்கள் 3 பேரை யும் கைது செய்தனர். இதில் ஒருவர் ஜாமீனில் விடுவிக்கப்படடார். மற்ற 2 சிறார்களும் நாங்குநேரியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே கோட்டார், வடசேரி போலீஸ் நிலையங்களில் அடிதடி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.