தமிழக செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு - உதவி டிரைவர் படுகாயம்

மர்ம நபர்கள் கல்வீசிய பயங்கர தாக்குதலில் ரெயில் என்ஜினின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சிதறியது.

சென்னை,

எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் உதவி டிரைவர் படுகாயமடைந்துள்ளார்.

மர்மநபர்கள் கல்வீச்சு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலை என்ஜின் டிரைவர் சரவணன் மற்றும் உதவி டிரைவர் மிதுன் ஆகியோர் இயக்கி வந்து கொண்டிருந்தனர். ரெயில் வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் இடையே வந்துகொண்டிருந்தபோது, தண்ட வாளத்தின் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென ரெயில் இன்ஜின் மீது சரமாரியாகக் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த பயங்கர தாக்குதலில் ரெயில் என்ஜினின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் உள்ளே இருந்த உதவி டிரைவர் மிதுனுக்கு தலையின் பக்கவாட்டி லும், காதிலும் காயம் ஏற்பட்டது. உடனே பெரம்பூர் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கும். பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கும் அவசர தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பெரம்பூர் ரெயில்வே போலீசார், கல்வீச்சில் காயமடைந்த உதவி டிரைவர் மிதுனை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மாற்று உதவி டிரைவர் ஏற்பாடு செய்யப்பட்டார். இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில், இரவு 8.35 மணிக்கு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் உதவி டிரைவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT